அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை அழுத்தங்கள் இன்றி மக்களுகக்கான சேவையை செய்வதில் எவரும் இடையூறு விழைவிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மைய காலங்களில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரது சார்பானவர்களால் மிரட்டலுக்குள்ளாகி வரும் அரச அதிகாரிகள் மீது அக்கறை கொண்டு அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிகாரிகள் பலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோரால் அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் வலியுறுத்தியிருந்தார்.
நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரச அதிகாரிகள் மீதான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிகாரிகள் தொலைபேசி ஊடாகவும் நேரிலும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.
குறித்த தரப்பினரது அச்சுறுத்தல்களுக்கு பயந்து சில அதிகாரிகள் தமது கடமையிலிருந்து தவறாக நடக்கும் நிலையும் காணப்படுகின்றது. ஆனாலும் ஒரு சிலர் தமது சுயநலன்களுக்காகவும் அத்தகைய தரப்பினருடன் இணைந்து செயற்படும் நிலையும் உள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்பதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் குறித்த விடயம் அவருக்கு தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்
மாறாக, அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும்,அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன் என்றும் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ள வேண்டும் என்றும்; அதனூடாகவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரோக்கியமானதாக அமையும் என்றும்’ நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஶ்ரீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.