சென்னை மார்க்க கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான பொழுதுபோக்கு மையங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தலங்கள், மால்கள் உள்ளன. இந்தச் சாலையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கார், லாரி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் அதிகம் வரும்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளதுபோல், ஈசிஆரின் சாலை தடுப்புகளின் மையப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் வாகன வேகத்தை கண்காணிக்கும் ரேடார் கருவிகள் அமைக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், மாமல்லபுரம் சரக உதவி காவல் ஆய்வாளர் சுந்தரவதனம் மற்றும் போலீஸார் அக்கரை பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த கருவிகள் அமைக்கப்படும் இடங்களை ஆய்வு செய்தனர்.
இக்கருவிகள் அமைக்கப்பட்ட உடன் வேகமாக செல்லும் வாகனத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே போலீஸார் கண்காணித்து, அங்கிருந்தபடியே அபராதம் விதிக்க முடியும். இந்த அபராதத்தை ஆன்-லைன் மூலம் வாகன உரிமையாளர் செலுத்த வேண்டி இருக்கும் என்றனர்.